மணல் குவாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை...!

மணல் குவாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை...!

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரி ஒப்பந்ததார்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மணல் குவாரி உரிமையாளரான தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனாம்பேட்டை கிரசென்ட் சாலையில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். 

இதேபோல், சென்னை அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீடு, முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். 

இதையும் படிக்க : வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டது!

புதுக்கோட்டையில் நிஜாம் காலனி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முத்து பட்டினம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மணல் தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரனுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதேபோல், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு சொந்தமான குவாரி மற்றும் மணல் இருப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும், கொள்ளிடம் கரையின் மறுபுறம் உள்ள தாளக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. 

திண்டுக்கல்லில் ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் உள்ளிட்ட மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அவரது மைத்துனரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த செவிட்ரங்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு சொந்தமான குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல், கரூர், தஞ்சை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.