புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோ வழக்கு: பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் விசாரணை...!

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோ வழக்கு: பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவிடம் விசாரணை...!

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவிடம் டி. எஸ்.பி வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதேசமயம் அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவை அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தது தொடர்பாக உத்ரபிரதேசத்தை சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரும், டெல்லி உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான பிரசாந்த் குமார் உம்ரா என்பவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் உம்ரா, இந்த வழக்கில் தன்னை கைது செய்ய கூடாது என உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். 

இதையும் படிக்க : எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்...அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

இதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, பாஜக நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவை விசாரணை செய்யவேண்டும் என போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்திருந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்தில் பிரசாந்த் உம்ரா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். டி எஸ்பி வசந்தராஜ், காவல் ஆய்வாளர் ஐய்யப்பன் ஆகியோர் நடத்திய விசாரணையில்,  அவருடைய வாக்குமூலங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து விசாரணை இடைவேளையின்போது வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீதிமன்ற உத்தரவின்படி இன்று மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜராக வந்ததாக தெரிவித்த அவர், போலீசார் எந்த தொந்தரவும் அளிக்காமல் தன்னிடம் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.