முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணை...!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணை...!

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்  ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி, தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரியும்,  தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை பேச மகேஸுக்கு இடைக்கால தடைவிதித்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில் தனக்கு எதிரான நில மோசடி தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட இந்த வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : ஜீவா நடிப்பில் புதிய படத்தின் பூஜை...! இயக்குனர் யார் தெரியுமா...?