"வழக்கிலிருந்து விலகபோவதில்லை" நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!

"வழக்கிலிருந்து விலகபோவதில்லை" நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!

தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த வழக்கிலிருந்தும் விலகப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில்  44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை  வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது  விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இரு வழக்குகளிலிருந்தும் அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்புகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் ரிவிசன் பெட்டிசன் என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், இரு அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுவதாக தெரிவித்து, வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டுமென கோரினார். தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய ஒரு விசயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

இவற்றிற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும்,  எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை என தெரிவித்தார். இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!