மீனவர்களுக்கென தனி வங்கி... கனிமொழி எம்.பி. பேச்சு...

தமிழகத்தில் மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

மீனவர்களுக்கென தனி வங்கி... கனிமொழி எம்.பி. பேச்சு...
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்பி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல்லை  கனிமொழி எம்பி நாட்டினார். மீனவர்களுக்கு மானிய விலையில் படகில் வெளிப்பொருத்தும் எஞ்சினை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
 
நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில், தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிவர்த்தி செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, தற்பொழுது ஆளும் அரசாக திமுக இருந்தபோதிலும் மீனவர்களின் குறைகளை கேட்டு சரிசெய்யும் அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகில் வெளி பொருத்தும் என்ஜின்கள் அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும். மீனவர்களின் கோரிக்கைப்படி விரைவில் மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,மீனவர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட நாள் கோரிக்கையான டீசல் மானியம் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண தொகை ரூ 8,000 ஆக உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என்றார். 
 
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.