வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பயணம்...

தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கன்னியாகுமரிக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பயணம்...

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், மாவட்டம் தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. திடீரென பெருவெள்ளம் பாய்ந்தோடியதன் காரணமாக குளங்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள், வயல்கள், வாழை மற்றும் ரப்பர் தோட்டங்கள், தென்னந்தோப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. அதிகபட்சமாக ஆள் உயர அளவிலும், குறைந்தபட்சமாக இடுப்பளவு வரையிலுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் குட்டித் தீவுகளாக மாறி உள்ளன. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், முகாம்களில் தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எப்போது வெள்ளம் வடியும்? மீண்டும் தங்களது வீடுகளுக்கு எப்போது திரும்புவோம்? என்ற கவலையோடு அவர்கள் உள்ளனர்.

இதனிடையே, சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சில இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்துள்ளது. வெள்ளமடத்தில் இருந்து மருங்கூர் செல்லும் சாலை, மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட ஊர் மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரியை பார்வையிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யும் அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவார். மேலும், மக்களிடம் குறைகளையும் கேட்டறிவார் என கூறப்படுகிறது.