பரபரப்பான கட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி மற்றும் கணினி ஆப்பரேட்டராகப் பணியாற்றிய தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கை, தற்போது காவல் துறையினர் மறு விசாரணை செய்து வருகின்றனர்.

பரபரப்பான கட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், ஐந்து தனிப்படைகள் அமைத்து, மறு விசாரணையானது நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், ஜம்சீர் அலி மற்றும் முக்கிய சாட்சிகளான கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜின் சகோதரர் தனபால், வாகன உதவி செய்த நபர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விசாரணையின் அடுத்தகட்ட நகர்வாக, கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி மற்றும் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய  தினேஷ்குமாரின் மர்ம மரண வழக்கை, மறு விசாரணை செய்ய வட்டாட்சியரிடம் தனிப்படை போலீசார் மனு அளித்திருந்தனர். 

அதன்படி சோலூரில், தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு நிர்வாகம் எந்த மன அழுத்தத்தையும் தனது மகனுக்கு கொடுக்கவில்லை என தினேஷ்குமாரின் தந்தை கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று தினேஷ்குமாரின் தாயார் கண்ணகி மற்றும் சகோதரி ராதிகா ஆகியோரிடம் தனிப்படை போலீசார், பல கோணங்களில்  விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.