நச்சுப் பேச்சுகளுக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்...தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிக்கை!

நச்சுப் பேச்சுகளுக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்...தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிக்கை!

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்த்து, மக்களுக்கான பணியை கவனிப்போம் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். 

ஸ்டாலின் அனுப்பிய அறிக்கை:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த  அறிக்கையில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய  கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் திமுகவை அறிஞர் அண்ணா தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயக்கத்தை மக்களுக்கானதாகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாகவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற முனைப்புடன் கருணாநிதி கட்டியமைத்ததாக கூறியுள்ளார். 

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்:

இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக ஊடகங்கள் வெளிகாட்டி வரும்  நிலையில், இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திவிட வேண்டும் என தீய சக்திகள் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். மேலும், அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் இடம் கொடுக்காமல் அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.விற்கு ஆட்சிப் பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருப்பதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார். 

இதையும் படிக்க: பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொது நிகழ்ச்சி, கட்சி கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் செய்திகள் திரித்து, மறைத்து, வெட்டி-ஒட்டி, ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நச்சு சக்திகளுடன் போராட வேண்டிய அவல நிலை தொடர்வதாகவும், தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என சில  மதவெறி நச்சு சக்திகள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்:

எனவே பொறுப்பு மற்றும் பயணம் நெடிய தூரம் இருப்பதை திமுகவினர் அறிந்து கவனமுடன் செயல்படுவதுடன், மக்கள் திட்டத்தை செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த நச்சு சக்திகளுக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.