வி.ஏ.ஓ கொலை வழக்கு; கொலையாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து வி ஏ ஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராமசுப்பு, மாரிமுத்து இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம்,  முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் இருசக்கர வாகன மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ராமசுப்பு என்பவர் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கொடூரமாக மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த முறப்பநாடு போலீசார் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் 52 சாட்சிகள் இந்த கொலை வழக்கு தொடர்பாக அடையாளம் காணப்பட்டு 31 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளி மாரிமுத்து என்பவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு செய்தார்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் மாரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்தார். ‌ இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டது  தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் நடைபெற்று இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் கைது செய்யப்பட்ட ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். இதில், ராமசுப்பு மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 17 வழக்குகள் உள்ளது. மாரிமுத்துவுக்கு கொலை முயற்சி உட்பட 6 வழக்குகள் உள்ளது.

இவர்கள் இரண்டு பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம்  449 (கடுமையான அயுதங்களுடன் அத்துமீறி நுழைவது), பிரிவு 302 (கொலை), பிரிவு 506(2) ஆயுதங்களுடன் மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்க: கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்...!