மதுரை ரயில் தீ விபத்து - தலைவர்கள் இரங்கல்!

மதுரை ரயில் தீ விபத்து - தலைவர்கள் இரங்கல்!

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மதுரை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது  சுற்றுலா ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பயணிகள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 10 பயணிகள் உயிரிழந்ததும் பலர் காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார். அதே வேளையில், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை தொடர்வண்டித்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : மதுரை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயற்கை மரணத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நமக்கு, தீ விபத்தில் சிக்கி பயணிகள் மரணம் அடைந்த கோர விபத்து மிகவும் கொடுமையானது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த பயணிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்யவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.