அன்பை பொழிந்த அன்பில் மகேஷ்: பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி

அன்பை பொழிந்த அன்பில் மகேஷ்: பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி

தாய், தந்தையை இழந்த சிறு பிள்ளைகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த பழனிவேல்-கோமதி தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாய் கோமதி புற்றுநோயால் உயிரிழக்க, தந்தையும் மஞ்சள் காமாலை நோயால் மறைந்தார்.

 இதனால் வயதான தாத்தா, பாட்டி அரவணைப்பில் தற்போது இரு பிள்ளைகளும் வாழ்த்து வருகின்றனர். மேலும் கஜா புயலால் சிக்கி சின்னாபின்னமான உடைந்த வீட்டில் தற்போது வரை அவர்கள் குடியிருந்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து தஞ்சை மாவட்ட பொறுப்பாளரான பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியிடம் தெரிவித்தார்.

 பின்னர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்கு சென்ற அமைச்சர், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்கைளையும் அவர்களை வளர்க்கும் தாத்தா பாட்டியையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல, உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

 குழந்தைகளை அணைத்து ஆறுதல் சொன்ன அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உடனே உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மூலம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், புயலில் உடைந்த வீட்டிற்குப் பதிலாக அரசு வீடு கட்ட நிதி ஒதுக்கவும் உத்தரவிட்டார். 

 இந்த நிகழ்வால் நெகிழ்ந்து போன மூத்த தம்பதிகள் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.