மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு ..!

மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேகதாது அணை விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  புதிய மனு ..!

மேகதாது அருகே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தொடக்கம் முதல் பதிவு செய்து வருகிறது. 

திட்ட அறிக்கையை  தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. எனினும் சமீபத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூன் 17ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறுகிறது. இதில்  மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.