லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து... தீயில் கருகி ஒருவர் பலி...

கடலூர் மாவட்டம், வேப்பூரில் பழுதடைந்து நின்ற லாரி மீது மினி டெம்போ மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

லாரி மீது மினி டெம்போ மோதி விபத்து... தீயில் கருகி ஒருவர் பலி...

வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் சாலையில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை ஓரம் பழுதடைந்து நின்றுள்ளது. இந்நிலையில் விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி டெம்போ, எதிர்பாராதவிதமாக பழுதடைந்து நின்ற லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.  

இதில் மினி டெம்போ தீப்பிடித்து எரிந்து, டெம்போவில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.