"எட்டப்பனாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம்" ஜி.கே.மணி விளாசல்! 

"எட்டப்பனாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம்" ஜி.கே.மணி விளாசல்! 

மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் MRK பன்னீர்செல்வம் இடம் பெறுவார் என பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

நில எடுப்பும் போராட்டமும்

கடலூர் மாவட்டத்தில் NLC 3 ஆம் சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றது. இதனை கண்டித்து அன்புமணி இராமதாஸ் தலைமையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் NLC 1 மற்றும் 1ஏ ஆகிய சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டது. இதனை கண்டித்து அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், " NLCக்கு அடிமையாக தொண்டூழியம் செய்கிறது தமிழக அரசு" என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து  NLC விவகாரத்தில், “சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?” என MRK பன்னீர்செல்வம் இன்று காலை கேள்வி எழுப்பி இருந்தார். 

கேள்வியும் பதிலும்

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், "NLC விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் வினா எழுப்பியிருக்கிறார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் திமுகவின் துரோகம் அவரது அறிக்கை வாயிலாகவே அம்பலப்பட்டிருக்கின்றது. 


தமிழ்நாட்டின் மிக முக்கியத்துறையான வேளாண் துறையின் அமைச்சராக இருக்கும் MRK பன்னீர்செல்வத்திற்கு வேளாண் துறை மீதும் உழவர் நலனிலும் தான் அக்கறை இல்லை என்று பார்த்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விவகாரங்கள் குறித்த அடிப்படை பார்வை கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிகிறது.  நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும். அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் வினாக்களுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும்தான் வெளியிடப்படும். அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் MRK பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதது பரிதாபம்தான்" என தெரிவித்துள்ளார்.

திமுகவின் பாஜக ஆதரவு

அடுத்ததாக தமிழ்நாட்டில் NLC சுரங்கத் திட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான். தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து NLCக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமம் வரும் 2036ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. NLCக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் NLC தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக அன்புமணி இராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

பாஐக அரசின் அனைத்து கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் எதிர்க்கும் திமுக NLC விவகாரத்தில் மட்டும் பாஜகவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மர்மத்தைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

எட்டப்பனாக எம்ஆர்கே

திமுக சார்பில் மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராவது NLC விவகாரம் குறித்தும், உழவர்கள் நலன் குறித்தும், நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய அவர், நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் MR கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் இருந்தார். அவர் எந்த அரசு பதவியிலும் இல்லை, ஆனால் உழவர்களின் நலனுக்காக போராடி வென்று கொடுத்தார். அதனால்தான் அவருக்கு வேங்கை என்று பெயர் என குறிப்பிட்ட ஜிகே மணி, அவரது புதல்வர்தான் MRK பன்னீர்செல்வம். அவர் வேளாண்துறை அமைச்சராக இருக்கிறார். அதற்குரிய அதிகாரத்தைக் கொண்டு உழவர்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்யலாம்.  ஆனால் அவர் உழவர்களுக்கு செய்தது துரோகம் மட்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 இப்போது கூட நெய்வேலியில் உழவர் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது அதை தடுக்காமல் கனடாவிற்கு உல்லாச பயணம் சென்றவர் தான் பன்னீர்செல்வம்  என தெரிவித்துள்ள ஜிகே மணி மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் MRK பன்னீர்செல்வம் இடம் பெறுவார். 

இதையும் படிக்க:"சென்னையில் வீராவேசம்; டெல்லியில் அடிமைத்தனம்" எம்.ஆர்.கே பாய்ச்சல்!