அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு   ஜாமீன் வழங்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலா ஜி, ஜாமீன் கோரி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி அல்லி விசாரித்தார். செந்தில் பாலா ஜி தரப்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நபர்களில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை எனவும், மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க வில்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலா ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

பா ஜகவில் ஏன் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலா ஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாகவும்  குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் எப்படி சாட்சிகளை கலைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அமலாக்கத்துறை விசாரணையின் போது, பா. ஜ.வில் ஏன் இணையக் கூடாது என அமலாக்கத் துறை கேட்டதாக கூறப்படும் வாதத்தை மறுத்த அமலாக்கத் துறை தரப்பு, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப்படி, அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோர முடியாது எனவும், செந்தில் பாலா ஜி இன்னும் அமைச்சராக நீடிப்பதால், செல்வாக்கான அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதி அல்லி இன்று தீர்ப்பளித்தார். அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதி,  செந்தில் பாலா ஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!