செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுப்பு...சேகர்பாபுவுக்கு சொன்ன கட்டுப்பாடுகள் என்னென்ன?

செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுப்பு...சேகர்பாபுவுக்கு சொன்ன கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் தொடந்து 8 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய முன் தினம் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவர்களின் அறிக்கை, அமலாக்கத்துறையினரின் உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : வெயில் எதிரொலி : சென்னையில் உச்சத்தை தொட்ட மின்சார உபயோகம்...!

இதனிடையே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறை காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காண்பதற்காக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி இல்லை என்றும், அவரை பார்க்க வேண்டும் என்றால் புழல் சிறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை காண்பதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தியதாகவும் கூறினார்.