ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் உதயநிதி சவால்!

நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கையெழுத்து இடுவாரா என அமைச்சர் உதயநிதி சவால் விடுத்துள்ளார். 

மதுரை மாவட்டம் மேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடை பெற்றது. மேலூர், கலைஞர் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.  அப்போது மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் என மூன்று தொகுதிகளை சேர்ந்த 1519 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், மேலும் பூத் கமிட்டி கிளை நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 20,654 பேர்களுக்கு நிதி உதவியினையும் வழங்கினார்.

பொற்கிழி வழங்கிட மேலூர் வருகை தந்த அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அமைச்சர் பி. மூர்த்தி  முன்னிலையில் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மேலூர் துவக்கத்தில் இருந்து விழா நடக்கும் இடம் வரை வழிநெடுக சாலையின் இரு புறங்களிலும் நின்று பிரமாண்டமான முறையில் திமுக கொடியினை கையில் ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த நிகழ்வை தொடர்ந்து மதுரையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம் எனவும், மாணவர்கள் நலனில் அக்கறை இருக்குமானால்  அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கையெழுத்து இடுவாரா என சவால் விடுத்தார்.
 
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!!