”அமெரிக்க அதிபரை போன்று வர மோடி முயற்சிக்கிறார்” - அமைச்சர் துரைமுருகன்

”அமெரிக்க அதிபரை போன்று வர மோடி முயற்சிக்கிறார்” -  அமைச்சர் துரைமுருகன்

அமெரிக்க அதிபரை போன்று வருவதற்கு பிரதமர் மோடி  விரும்புகிறார் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில்  திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரா என்றும், தமிழர் பண்பாடு கலாச்சாரத்தால் மெட்ராஸ் தமிழ்நாடு என பெயர் மாற்றினோம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற என்ன இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து, ” சிறுபான்மை என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கக்கூடாது;  இதயத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும், இந்த நாடு இந்தியா இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல. ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கிறது,ஒருவருக்கு,கிறிஸ்தவ மதம் பிடிக்கிறது ,ஒருவருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கிறது அதற்காக இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று சொல்வதா ? ”, எனவும் கூறினார்.

” திடீரென பாராளுமன்றம்  கூடுகிறது என்று சொல்கிறார்கள்; எதற்கு என்று கேட்டால் ஒரே நாடு,ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே அதிபர் மோடி என்று சொல்லி இந்த நாட்டை அழித்துவிட பார்க்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? ”

” நம் நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர்கள் இந்தியா என்றார்கள்,70 ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் இந்தியா என்றார்கள்,நேற்று வரை இந்தியா என்று சொன்ன பாஜக இன்று பாரத் என்கிறார்கள். நாடு எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது. எங்கே போய் முட்டி நிற்கும் என்று தெரியவில்லை. ஒரு வேளை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரா என்றும் தெரியவில்லை”, என சாடினார்.

நான் சிறுபான்மையினர் என்ற தாழ்வான எண்ணம் உங்களுக்கு இருக்கக் கூடாது.  நான் எவருக்கும் சிறுபான்மையினர் அல்ல; தாழ்ந்தவர் அல்ல; இந்த மண்ணுக்குரியவர் என்ற தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக தான் உடனே வந்து நிற்கும். 

மேலும், “ சென்னை மாகாணத்தை,..  தமிழர் வாழ்வதால் தமிழர் பண்பாடு கலாச்சாரம் உள்ள காரணமாக தமிழ்நாடு என மாற்றினோம்.  பாரத் என மாற்றுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது,

” வாக்குக்காக தேர்தலில் நிற்கிறோம் என்று சொல்பவர்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்லிக்கொள்கிறேன்.  திமுக வாக்குக்காக தேர்தலில் நிற்கின்ற இயக்கம் அல்ல. இந்த சமுதாயத்தை சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. தேர்தலில் நிற்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல திமுக;  மக்களின் சீர்திருத்தத்திற்காக உருவாக்கப்பட்டது திமுக இயக்கம்.” 

” தோளிலே துண்டு போடுவதற்கு உரிமை உண்டு என்பதை நிலைநாட்டுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்; பெண்களுக்கு சொத்தில் சம பங்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக.

கலைஞரின் பேரப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்று சொன்னவுடன் அவர்களுக்கு உடல் பற்றி எரிகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவர்தான் இந்திய நாட்டினுடைய பிரதமர் என்பது உறுதியாகிவிட்டது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சகித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் புலம்புகிறார்கள் என்பது தான் உண்மை.

சகோதரன் ஒரு சகோதரியை அடிமைப்படுத்துகிற நிலை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும்  இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய  நிலைப்பாட்டை புரிந்து கொண்டு  எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது திராவிட மாடல் கொள்கையை புரிந்து கொண்டார்களே என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற அச்சம்.

எங்களை பொறுத்தவரையிலும் நாங்கள் எப்பொழுதும் எதற்காகவும் அச்சப்படுவதில்லை அதே நேரத்தில் அலட்சியமாகவும் இருக்க மாட்டோம்.  வருகிற நாடாளுமன்ற தேர்தல் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பாஜகவை  பொறுத்தவரையிலும் இந்திய மக்களை குழப்புவது தான் வேலையாகவும் மூலதனமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நாடு பன்முகம் கொண்ட நாடு. பல்வேறு வேற்றுமைகளும் ஒற்றுமை காண வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். ஒற்றுமையில் வேற்றுமை காண வேண்டும் என்பதுதான் பாசிச மாடல்.

எல்லோரோடும் இணைந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை.  எல்லோரையும் சூழ்ச்சியால் பிரித்து ஆள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கொள்கை. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவது தான் அவர்களுடைய கொள்கை. இந்தியாவின் பொருளாதாரத்தை சிலருக்கு மட்டும் சுருட்டி கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. திராவிட முன்னேற்றக் கழகம் குடும்ப கட்சி தான். கொள்கையில் உறுதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் ஒருங்கிணைக்கிற கட்சி தான் அதில் ஒன்றும் தவறில்லை.”, எனறு பேசினார்.

இதையும் படிக்க   | ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு....!