வெறிநாய் கடித்து 50 க்கும் மேற்பட்டோர் காயம்!

வெறிநாய் கடித்து 50 க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்கரன்கோவில் அருகே  முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்திற்க்குள் திடீரென புகுந்த வெறிநாய் ஒன்று முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என கண்ணில் காண்போரை எல்லாம் கடித்து குதற தொடங்கியது. இதனால், திடீரென கிராமம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் வெறி நாயை பிடிப்பதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போக்கு காட்டிய வெறி நாய் ஆங்காங்கே பதுங்கி இருந்து  ஒவ்வொருவரையாக  கடித்து வந்தது.  இதனால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். தொடர்ந்து நாயை பிடிக்கும் முயற்சியில் ஏமாற்றம் அடைந்த கிராம மக்கள், ஒலிப்பெருக்கி மூலம் கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி வீதி வீதியாக சென்று அறிவிப்பு செய்ய  தொடங்கினர். மேலும் மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகளையும் வெறிநாய் கடித்துக் குதறியது.

நேற்று காலை முதலே குருக்கள்பட்டி கிராமத்தின் அருகே உள்ள கிராமங்களான மருதங்கிணறு திருமலாபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ளவர்களையும்  ஆடு மாடுகளையும் கடித்ததாகவும், சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குருக்கள்பட்டி கிராமத்தில் இரவில் வெறி நாய் கடித்ததில் அன்னத்தாய்(67), தனம்(50), ராதிகா(7), பொன்னம்மாள், தனுசியா, மலா, ராஜ்குமார், வெள்ளத்துரை, செல்வி, பாப்பா (85) மகாலட்சுமி, உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெறி நாய் பிடிபடாமல் போக்கு காட்டி வருவதால் குருக்கள் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சின்ன கோவிலாங்குளம் சண்முகநல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமபகுதிகளில் தொடர்ந்து வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க:முகமது அப்பாஸ் வழக்கு ''காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவு''!