நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...அப்போ பொறியியல் கலந்தாய்வு தேதி?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...அப்போ பொறியியல் கலந்தாய்வு தேதி?

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது...

ஜூலை 17:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 95 சதவீதம் பேர் தேர்வை எழுதினர்.

தேர்வு முடிவுகள் தாமதம்:

கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 

பொறியியல் கலந்தாய்வு தாமதம்:

நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டதால், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நீட் தேர்வு முடிவினை ஆகஸ்ட் 20 ஆம் தேதி என்று அறிவித்ததால், பொறியியல் கலந்தாய்வையும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் நீட் தேர்வு முடிவுகள் சொன்ன தேதியில் வெளியாகாததால், பொறியியல் கலந்தாய்வு தேதியை  குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/EPS-Case--Adjournment-of-judgment-without-date

செப்டம்பர் 7:

இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி தேர்வர்களின் விடைத்தாள் குறிப்புகளாக OMR விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் கலந்தாய்வு:

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு கட் - ஆப் உயரும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.