பாஜக ஆட்சி தொடர்ந்தால் அரசியலமைப்பை யாராலும் காப்பாற்ற முடியாது -மு.க.ஸ்டாலின்!

பாஜக ஆட்சி தொடர்ந்தால் அரசியலமைப்பை யாராலும் காப்பாற்ற முடியாது -மு.க.ஸ்டாலின்!

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம், சமூக நீதி, அரசியலமைப்பை யாராலும் காப்பாற்ற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திமுக டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் அனைத்தும் திருப்புமுனை மாநாடாக அமைந்துள்ளது என்றார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்கிற அடிப்படையில் தி.மு.க., செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திமுகவை யாரும் நிராகரிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், எந்த கொம்பனும் குறை கூற முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார். தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் திமுகவுக்காக பிரச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பா.ஜ.க தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் ஜனநாயகம், சமூக நீதி, அரசியலமைப்பை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார். 

மணிப்பூர் கலவரம் குறித்து பேசாத அதிமுகவினர் பாஜக-வின் கொத்தடிமையாக செயல்படுவதாக செயல்படுவதாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழல்வாதிகளை உடன் வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசலாமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூராக மாறிவிடாமல் காக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட  அவர், தமிழையும், தமிழ்நாட்டையும் காக்க பா.ஜ.க வை வீழ்த்துவதே முக்கிய இலக்கு என்றார். இதனைத் தொடர்ந்து, பெரிய மிளகு பாறையில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, உணவின் தரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க:"மாநில அரசின் சட்டம் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது" உயர் நீதிமன்றம் கருத்து!