வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  ஆலோசனை...

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்று  ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  ஆலோசனை...

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெறும் ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள்,  உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47% வரை மழை கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நிலையில் இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா,நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டது.இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வடக்கிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணியும் நடைப்பெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், இன்று  நடைபெறும் ஆலோசனையில் முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பருவமழை தொடங்கியுள்ளதால் நகர்ப்புற, ஊரக பகுதியில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம்செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக் கட்டுகளின்  கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் என தெரிகிறது.