பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம்.. டி.எம்.எஸ் வளாகத்தை முற்றுகையிட்ட செவிலியர்களால் பரபரப்பு!!

சென்னையில், கொரோனா காலத்தில் பணியாற்றி பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட செவிலியர்களுடன், அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பணிநிரந்தரம் கோரி செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம்.. டி.எம்.எஸ் வளாகத்தை முற்றுகையிட்ட செவிலியர்களால் பரபரப்பு!!

அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா கிளினிக்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதனைத்தொடர்ந்து பொறுப்பேற்ற திமுக அரசு, வருமுன் காப்போம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதோடு, அம்மா கிளினிக்குகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என கூறி அவற்றை மூட உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கிளினிக்குகளில் மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 

இந்தநிலையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் பணிநிரந்தரம் கோரி டிஎம்எஸ் வளாகம் மற்றும் அண்ணா நினைவிடம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அங்கு திரண்ட அம்மா கிளினிக் மருத்துவர்களும்  போராட்டம் நடத்திய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை குண்டுக்கட்டாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, செவிலியர்களில் சிலர், முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகம் செல்லும் கடற்கரை சாலையில் சந்திக்க குவிந்தனர். அதை அறிந்து அவர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.