பழங்குடியின மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டி.எஸ்.பி

ஆண்டிப்பட்டி அருகே பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

பழங்குடியின மக்கள் மீது  ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல்.. நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டி.எஸ்.பி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தகோவில் மலைப்பகுதியில் வசித்து வரும் பழங்குயின மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தது.

ஆனால் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை அப்பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர், ஆக்கிரமித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியிருக்க வீடுகள் இல்லாத காரணத்தால், பழங்குடியின மக்களில் பலர் வனப்பகுதிக்குள் குடிபெயர்ந்து விட்டனர். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், பழங்குடியின மக்களை தாக்கினர். இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் அறிந்த,  ஆண்டிப்பட்டி டி.எஸ். பி. தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர். பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை அனைத்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ். பி. உறுதி அளித்தார்.