ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்...! ஆளுநர் ஒப்புதல்...!!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்...! ஆளுநர் ஒப்புதல்...!!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய தள சூதாட்டங்களால் இதில் பெங்கேற்கும் பலர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் இணையதள சூதாட்டங்களை தடை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது. ஆளுநரின் பரிசீலனைக்காக இருந்த இந்த மசோதா தற்போது அவரின் ஒப்புதலை பெற்றுள்ளது. 
 
தற்போது ஒப்புதல் கொடுக்கப்பட்ட மசோதா  இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்ற பட்டதாகும். முன்னதாக ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார். இந்நிலையில் சட்டமன்றம் மீண்டும் கூடி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக  தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் தனது மாளிகையில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கு உரையாற்றும்போது "ஆளுநர் ஒரு சட்ட மசோதாவை நிலுவையில் வைத்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்ததும் அதனையடுத்தது இன்று ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.