"இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும்" பழனி கோயில் மீண்டும் அறிவிப்பு!

"இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும்" பழனி கோயில் மீண்டும் அறிவிப்பு!

பழனி முருகன் கோவிலில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதி என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் சார்பில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.

கும்பாபிஷேக பணிகளுக்காக பதாகை அகற்றபட்ட நிலையில் கடந்த மாதம் இஸ்லாமிய குடும்பத்தினர் மின் இழுவை ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே சென்ற போது இஸ்லாமிய பெண் அணியும் ஆடையை அணிந்துள்ளனர். அப்போது சூப்பிரண்டு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபடும் என்றும் டிக்கெட்டை திரும்ப கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் சர்ச்சையானதாலும், இது சமூகவலைதளத்தில் பரவி விமர்சனத்துக்கு உள்ளானது. உடனடியாக கோயில் நிர்வாகம் அந்தப் பெயர் பலகையை அகற்றியது.

பெயர் பலகை அகற்றியதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வின்ச் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், பெயர் பலகை அகற்றப்பட்டது சம்பந்தமான வழக்கு ஒன்றைத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்து சமய அறநிலை துறையின் விதியின் கீழ் வைக்கப்பட்ட பெயர் பலகை ஏன் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் பெயர் பலகையை வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு 28 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில்  நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மீண்டும் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் பழனி மலை அடிவாரத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஊழலை தடுக்க கடும் சட்டம் இயற்ற வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்!