பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறப்பு... வெள்ளக்காடாக மாறிய மணலி புதுநகர் பகுதிகள்...

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சென்னை மணலி புதுநகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  

பூண்டியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறப்பு... வெள்ளக்காடாக மாறிய மணலி புதுநகர் பகுதிகள்...

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பூண்டியில் இருந்து 23 ஆயிரத்து 500 கன அடி நீர் உபரியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 

இந்த நீரானது மணலி புதுநகர் வழியாக எண்ணூர் முகத்துவாரம் மூலம் கடலில் கலக்கும். கடலில் கலக்கும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மணலி புதுநகர் அருகேயுள்ள  வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர், ஜெனிபர் நகர், சடயங்குப்பம், பர்மா நகர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி சார்பில் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முகாம்களுக்கு வர மறுத்த மக்களுக்கு படகுகள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.