சாத்தான்குளத்தில் பேருந்து இயக்காததால் பயணிகள் அவதி ; மெத்தனமாக பதிலளிக்கும் அதிகாரிகள்...!

சாத்தான்குளத்தில்  பேருந்து இயக்காததால் பயணிகள் அவதி ;  மெத்தனமாக  பதிலளிக்கும் அதிகாரிகள்...!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாததால் பயணிகள் சொந்த ஊருக்கு செல்லாமல் அவதி அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் திருநெல்வேலிக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று காலை 10: 55 மணிக்கு சாத்தான்குளம் வந்துள்ளது.

அதாவது, 11 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய அந்த அரசு பேருந்து,  சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இயக்கப்படாமல் அங்கேயே நின்றுள்ளது. இதனால்  பயணிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.வெயில் சுட்டெரிக்கும் சமயத்திலும், வெகு நேரமாக அங்கேயே பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 

அதோடு,  வேலைக்கு செல்லும் பயணிகளும், சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் அவதியுற்றனர். எனினும், நீண்ட நேரமாகியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வராததால் பயணிகள் அனைவரும் இறங்கி மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனர்.

இது குறித்து சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை அதிகாரியிடம் கேட்டபோது; "ஆள் பற்றாக்குறை; அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?"  என்று அலட்சியமாக பதிலளித்திருக்கிறார். 

தொடர்ந்து,  டீ கடையில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் இது பற்றி கேட்டபோது," டிக்கெட் செக்கிங் செய்து முடித்து தான் பேருந்தை  எடுக்க முடியும்" என்றும், " ஆள் இல்லை; நாங்களே ( (Overtime )  கூடுதல் நேரவேலை தான் பார்க்கிறோம் "  என்று கூறுகின்றனர்.

இப்படி பொதுமக்களின் அன்றாட  வாழ்க்கைமுறையை பாதிக்கும் வகையில் சரியான  நேரத்திற்கு பேருந்தை இயக்காமலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சரியாக வழிநடத்தப்படாமல் இருக்கும் நிலையும் தொடர்கிறது. எனவே அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க     | கோடை வெப்பம் - தரமான குடிநீர் வழங்க பெற்றோர் கோரிக்கை!