மூடப்பட்ட அங்கன்வாடியைத் திறக்கக் கோரி போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை  வட்டத்தில் மூடப்பட்ட குழந்தைகள் மையத்தை திறக்கக் கோரி கிராம மக்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தங்கரை விடுதி ஊராட்சி தெற்கு வாண்டான் விடுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் தெற்கு வாண்டான் விடுதி மின்னம்புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றன. 

இந்நிலையில் மூன்று மாத காலங்களாக அங்கன்வாடி மையம் பூட்டிய நிலையில் திறக்கப்படாததால் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி முதல் சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குழந்தைகளின் பெற்றோர்கள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கன்வாடி மையத்தை திறக்க கோரி கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கன்வாடி குழந்தைகள் என 100கும் மேற்பட்டோர் தெற்கு வாண்டான் விடுதி அங்கன்வாடி மையம் முன்பு அங்கன்வாடி மையத்தை திறக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இருபது ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திறக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.