செந்தில் பாலாஜி வழக்கு மீதான மனு : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு..!

செந்தில் பாலாஜி வழக்கு மீதான மனு :  சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு..!
இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கவனித்து வந்த இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டன. இது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது.  அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 
 
இந்நிலையில், தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, மற்றும் கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்படால் மட்டுமே பதவி இழப்பு செய்ய முடியும் என்று கூறி, அமைச்சராக நீடிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். 
 
இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இருவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ரகசியமானது என்பதால் கடிதத்தை சமர்ப்பிக்க இயலாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தொடர்ந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க கோரியதால், வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 
 
இவ்வாறிருக்க, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
அவர தனது மனுவில், 
 
, "கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.
 
இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" 
 
என மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதனுடன் தொடர்புடைய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.