இருசக்கர வாகன திருடனை ஓட ஓட விரட்டி பிடித்த போலீஸ்...சிசிடிவி வைரல்...

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையரை போலீசார் ஓட ஓட விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

இருசக்கர வாகன திருடனை ஓட ஓட விரட்டி பிடித்த போலீஸ்...சிசிடிவி வைரல்...

கோவை மாவட்டம் சூலூர் அருகே போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீலம்பூர் எல் என் டி பைபாஸ் சாலையில் சந்தேகம்படும்படியாக இருவர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களிடம் எதற்காக இங்கு நிற்கீறிர்கள் என போலீசார் கேட்டதும், இருவரும் ஒன்றும் கூறாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. போலீசாரும் ரோந்து வாகனத்தில் வேகமாக சென்று அவர்களை பின் தொடர்ந்தனர்.

போலீசார் துரத்தி வருவதை கண்ட இருவரும் முதலியார்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை ஓடி சென்று திருடனை மடக்கி பிடித்தார். மற்றொருவர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பிடிபட்டவரை  காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த ஹரிஹரசுதன்  என்பதும் கோவை பகுதியில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடியவர் சென்னையை சேர்ந்த சங்கர் என்பதும் இருவரும் கோவையில் தங்கியிருந்தது வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.