"ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0".. தீவிரம் காட்டி வரும் காவல்துறையினர்.. பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் காட்டி வரும் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

"ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0".. தீவிரம் காட்டி வரும் காவல்துறையினர்.. பல்வேறு பகுதிகளில் போதைப் பொருட்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி வரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 அமலில் உள்ள நிலையில், கஞ்சா விற்பனை மற்றும் கொள்முதலை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையின் போது ஆந்திராவில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியிலும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள பேரண்டப்பள்ளி எனும் இடத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, பேருந்து மூலமாக கஞ்சா கடத்தி வந்த குமார் என்பவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். போதைக்கு அடிமையான மாணவர்களை உரிய ஆலோசகரிடம் அனுப்பிவைத்து அப்பழக்கத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.

இதையடுத்து, சென்னை மதுரவாயல் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பிரபா என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது 3 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர்.