கால்பந்து வீராங்கனையின் உயிரைப் பறித்த மருத்துவர்கள் தலைமறைவு தீவிர தேடுதலில் காவல்துறை

இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பெரவள்ளூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை

கால்பந்து வீராங்கனையின் உயிரைப் பறித்த மருத்துவர்கள் தலைமறைவு தீவிர தேடுதலில் காவல்துறை

தீவிர விசாரணையில் போலீசார் 

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு மருத்துவர்களின் இருப்பிடம் மற்றும் குடும்ப விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேரந்த கூலி தொழிலாளி ரவி மற்றும் உஷா தம்பதியரின் மகளான பிரியா (17) ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன், கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார். 

மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டதால் கடந்த அக். 28 ஆம் தேதி அவர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பிரியாவிற்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


தவறான சிகிச்சையால் கால் அகற்றம் 

அறுவை சிகிச்சைக்கு பின் மாணவி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த நவ. 8 தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் பிரியாவுக்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது.

இதையும் படிக்க: ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு விசாரணை..!

சிகிச்சை பலனின்றி உயிரி ழப்பு 

தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவி பிரியாவின் உடல்நிலை கடந்த நவ.14 ஆம் தேதி திடீரென கவலைக்கிடமான நிலையில், பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக நவ.15 ஆம் தேதி காலை கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


மருத்துவர்கள் பணியிடை நீக்கம்

இச்சம்பவம் தொடர்பாக பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனிக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு மாணவி மரண காரணம் மற்றும் தவறான சிகிச்சைகளின் விவரங்கள் தொடர்பாக மருத்துவ அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமறைவான மருத்துவர்கள் 

அதேபோல காவல்துறை சார்பிலும் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் பெரவள்ளூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பணியிடை நீக்கம் தொடர்பான நகல் வழங்க மருத்துவர்களை அணுகியபோது அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரின் இருப்பிடம், குடும்ப விவரங்கள் தொடர்பாக போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.