திமுக பிரமுகருக்கு பதில் அதிமுக பிரமுகரின் வீட்டு கதவை தட்டிய காவல்துறை!!

புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் தி.மு.க. பிரமுகருக்கு பதிலாக அ.தி.மு.க. பிரமுகரை தேடிச் சென்ற போலீசாரை மக்கள் சூழ்ந்து கொண்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் கார் டிராவல்ஸ் நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 கார்கள் மாயமானது. 

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் பகுதியை சேர்ந்த பாரதிதாசன் என்பவர்தான் காரை திருடியதாக கண்டு பிடித்தனர். 

தி.மு.க.வில் பொன்னமராவதி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்த பாரதியை விசாரிப்பதற்காக மறைமலை நகர் எஸ்.ஐ. சிவா, கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர்களை அழைத்துக் கொண்டு துடிப்புடன் கிளம்பினார். 

ஆனால் காரையூருக்கு சென்று விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் தி.மு.க. பிரமுகர் பாரதியின் முகவரியை கொடுப்பதற்கு பதிலாக அ.தி.மு.க. பிரமுகர் பாரதியின் முகவரியை கொடுத்துச் சென்றனர்.  

காரையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான பாரதி சிதம்பரம் வீட்டின் கதவை அதிகாலை 4 மணியளவில் தட்டிய போலீசார், பாரதியை கைது செய்ய வந்துள்ளாக கூறினர். 

அப்போது அங்கு வயதான பெண்மணி அழகம்மாள் என்பவர் இருக்க, போலீசாருக்கு குழப்பம் சூழ்ந்து கொண்டது. இதையடுத்து அழகம்மாள் கத்திக் கூப்பாடு போட்டதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து போலீசாரை சூழ்ந்து கொண்டனர். 

கார் திருடனின் முகவரியை தவறாக புரிந்து கொண்டு தங்களை கைது செய்ய வருவதா? என கொக்கரித்த அ.தி.மு.க. பிரமுகர் பாரதி எஸ்.எஸ்.ஐ. சிவா, கார் டிரைவர் உள்பட 5 பேரை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போலீசார், தாங்கள் முகவரி மாறி வந்து விட்டதாகவும், தி.மு.க. பாரதிக்கு பதிலாக அ.தி.மு.க. பாரதியின் வீட்டுக்கு வந்தது தவறுதான் என கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கை விட்டனர். 

கார் திருட்டு வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகரை பிடிக்க போய் கடைசியில் எதிர்க்கட்சி பிரமுகரிடம் சிக்கிக் கொண்டு திருதிருவென விழித்தது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.