கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க திருக்கோவில்களின் கும்பாபிஷேக திருப்பணி துவக்க பூஜை விழா..!

அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை தொடக்கம்...

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க திருக்கோவில்களின் கும்பாபிஷேக திருப்பணி துவக்க பூஜை விழா..!

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் தான். இந்த கிரிவலப் பாதையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், சூரியலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்கள் உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 2022 - 23 ஆம் ஆண்டிற்காக 1000 திருக்கோயில்களுக்கு 500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், ஈசான்யலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்க திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற உள்ளது.

அதற்காக இன்று திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலின் தேரடி வீதியில் அமைந்துள்ள இந்திரலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும், குடமுழுக்கு திருப்பணிகளுக்காக கோவில் வளாகத்தில் கலசம் அமைத்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊழியர்கள் சார்பில் புணரமைப்பு பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது. பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த உடன் அஷ்டலிங்க திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.