"ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்! 

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்றும் , தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் என மூன்று தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6000 த்திற்கும் அதிகமான பட்டதாரிகளும், ஆசிரியர்களும் வளாகத்தில் குவிந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், பட்டதாரிகள் இடையே நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதியை இரண்டரை ஆண்டு காலமாக நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்றும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

அதேபோன்று வேலைக்காக போராடும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராடக் கூடிய ஆசிரியர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய பிரமலதா விஜயகாந்த், முதலமைச்சர் உடனடியாக டிபிஐ  வளாகத்திற்கு வர வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தேமுதிக, ஆசிரியர்களோடு இணைந்து போராடும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!