மாநிலங்களுக்கு அவசர கால நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள அவசர கால நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபாயை மாநிலங்களுக்கு வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு அவசர கால நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு...

கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி இன்று தமிழகம்,  ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்களை கேட்டறிந்தார்.  அப்போது அவர் மாநிலங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தியதோடு, மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையையும் உயர்த்தவும் அறிவுறுத்தினார். 

மேலும் 3-வது அலைக்கு வாய்ப்பிருப்பதால் அதற்கு தயாராக இருக்கும்படியும், குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா நிலவரங்களை தெரிவித்திருந்தன. 

நிகழ்ச்சியின் போது  மருத்துவமனைகளில் படுக்கை  உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 23 ஆயிரம் கோடி ரூபாயை அவசர கால நிதியாக வழங்கவுள்ளதாகவும், இதனை பயன்படுத்தி  நகர்புற பகுதிகளில் சுகாதார சேவையை மேம்படுத்தி, சிகிச்சை வசதிகளை பெருக்கிக்கொள்ளவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

முன்னதாக  கடந்த 13-ம் தேதி பிரதமர் மோடி வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த 7 முதல்வர்களுடன்  ஆலோசனை நடத்தி, மலைபிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாவாசி களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.