திண்டுக்கல்லில் தனியாா் பேருந்து கண்ணாடி உடைப்பு..!

திண்டுக்கல்லில் தனியாா் பேருந்து கண்ணாடி உடைப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மர்ம நபர்கள் தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு தனியார் பஸ் ஒன்று வந்தது.  பஸ்ஸில் கண்டக்டராக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமிபுதூரை சேர்ந்த செல்வராஜ் வயது 29 என்பவர் இருந்துள்ளார். 

பஸ்சை நிறுத்திவிட்டு, அவர் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஆட்டோவை கண்டக்டர் செல்வராஜ் மீது மோத வந்துள்ளனர். மோதலில் இருந்து தப்பித்த செல்வராஜ் தனது கைகளால் தாக்கி ஆட்டோவின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த செல்வராஜை சக ஊழியர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்த தனியார் பேருந்து மாற்று கண்டக்டர் உடன் ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சேனன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே ஆட்டோவில் வந்த அதே மர்ம நபர்கள் திடீரென கற்களை பஸ் கண்ணாடி மீது வீசி தாக்கியுள்ளனர். 

இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பஸ் டிரைவர் ஆயக்குடியை சேர்ந்த கதிரேசன் படுகாயமடைந்தார். கண்ணாடி துண்டுகள் பட்டதில் 3 பெண்கள் லேசாக காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ஆட்டோ கண்ணாடியை உடைத்த முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்து சென்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க    | 3-ம் கட்ட நடைபயனத்தை தொடங்குகிறார் அண்ணாமலை..!