மீன் விற்பனை செய்வதில் இருதரப்பு மீனவர்களிடையே பிரச்சனை.. மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

நாகை மாவட்டம் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்ய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மற்றொரு தரப்பு மீனவர்கள் மீன்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன் விற்பனை செய்வதில் இருதரப்பு மீனவர்களிடையே பிரச்சனை.. மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே பிரச்சனை எழுந்தது.

இந்நிலையில், கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிய மேல பட்டினச்சேரி மீனவர்கள் துறைமுகத்தில் மீன்களை விற்க முயன்றனர். அப்போது அவர்கள் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்யக்கூடாது, அவர்களிடம் இருந்து மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது என கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைனந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள், தாங்கள் கொண்டு வந்த மீன்களை சாலையில் கொட்டி, துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மீனவர்கள் நாகூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த டி. எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மீனவர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர். இதன் பிறகு மேல பட்டினச்சேரி மீனவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினர்.