ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள்...கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்...கோரிக்கை விடுக்கும் மக்கள்!

ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள்...கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்...கோரிக்கை விடுக்கும் மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பிஸியான திருத்தணி நகரம்:

திருத்தணி என்றாலே, எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகரமாக அறியப்படுகிறது. அதற்கு காரணம், அங்கு மிகவும் பழமைவாய்ந்த திருத்தணி முருகன் கோயில் இருப்பதாலும், அதிக திருமண மண்டபங்கள் இருப்பதாலும், அதுமட்டுமின்றி வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லக் கூடிய முக்கிய பிரதான சாலைகள் அங்கு இருப்பதாலும் அந்நகரம் எப்போதும் பிசியான நகரமாக காணப்படுகிறது.

அலட்சியம் காட்டும் அதிகாரிகள்:

இப்படி மிகவும் பரபரப்பு மிகுந்தும்,சிறப்பு வாய்ந்தும் காணப்படும் திருத்தணியில்,  நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் உள்ள நீர்நிலை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கால்வாய் கட்டுமானப் பணிகள் மெத்தனப் போக்குடன் நடைபெறுவதுடன், அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் உள்ளது. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 

மேலும் படிக்க: https://www. malaimurasu.com/posts/sports/Oh-this-is-heavy-practice-Virat-crawled-on-a-scooty-with-his-wife

திணறும் காவல்துறையினர்:

ஞாயிற்றுக்கிழமையான இன்று திருத்தணி முருகன் கோயில் மற்றும் திருத்தணியில் நடைபெறும் கல்யாண வைபவங்களில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் திருத்தணிக்கு படையெடுத்து வருகின்றனர்.  இதனால், அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, பை-பாஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, நெடுஞ்சாலைகளில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகனப் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். 

கோரிக்கை:

இந்நிலையில், ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் நீர்நிலை கால்வாய் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், திருத்தணியில் உள்ள திருமண மண்டபங்களில் உரிய பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.