வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் காட்டாற்று வெள்ளம் பொதுமக்கள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் என 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது அய்யனார் கோவில் பகுதி. இந்த பகுதியில் நீர்வரத்து ஓடைகள் உள்ள காரணத்தினால் பொதுமக்கள் ஏராளமானோர் நாள்தோறும் இங்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில் மலைப்பகுதியில் இரண்டு மணி நேரம் பெய்த மழை காரணமாக அய்யனார் கோவில் ஓடை, ராக்காச்சி அம்மன் கோவில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. 

விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்படக்கூடிய நிலையில் தற்போது வனப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை எனவும் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!