விரைவில் மாநகராட்சியாகும் புதுக்கோட்டை!!

புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக அறிவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேஎன் நேரு உறுதியளித்துள்ளாா். 

புதுக்கோட்டை நகராட்சி , திருவப்பூரில் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் , குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் , ரூ .75.06 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, புதுக்கோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால் முறையாக குடிநீர் வழங்க முடியவில்லை எனவும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட 10 எம் எல் டி தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது எனவும், குழாய்கள் சீரமைக்கப்பட்டால்  16 எம்எல்டி தண்ணீர் வழங்கப்படும் எனவும் இதற்காகத்தான் தற்போது ரூ .75.06 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூ2,195 கோடியில்  செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், "பாதாள சாக்கடை திட்டத்தில்  சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இயந்திரங்கள் மூலம் கழிவுகள் அகற்றும் நடைமுறை  செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில தனிப்பட்ட நபர்கள்  நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் கழிவுகளை அகற்ற முற்படும்போது  எதிர்பாராதவிதமான  உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பாதாள சாக்கடைகளை அகற்ற தேவையான இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்புகளை தடுக்க அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சிலர் செய்யும் தவறால்  அரசுக்கு தேவை இல்லாமல் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள்  குறிப்பிட்ட தேதிக்குள்  ஊதியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நடக்கும் தவறுகளை திருத்திக் கொண்டுதான் உள்ளோம்" என கூறினார்.

மேலும், "புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி வருவாயை கருத்தில் கொண்டு மன்னர் நகரம் என்பதாலும் விரைவில்  அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.