கனமழை எதிரொலி: 3 வது முறையாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட புதிய பாலம்...!

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிக்கரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஏழு எருமை பள்ளம், காலட்டியூர் ஆகிய பகுதிகளில் தரைமட்ட பாலத்திற்கு மேல் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதேபோல் கோவை புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர் என அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக ரயில் நிலையம், அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இதேபோல் லங்கா கார்னர் பாலம் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பிரேக் பிடிக்காமல் அங்கிருந்த டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதை அடுத்து மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதிலிருந்த நோயாளி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
இது மட்டுமின்றி வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிக்க : காலாண்டு வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டம்...!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் கூடக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நீர் தேக்க குளத்தில் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் வழியாக வெள்ள நீர் வெளியேறி வருவதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருக்கும் நெற்பயிக்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த நீரானது தட்டாம்புதூர் வழியாக பவானி ஆற்றில் கலப்பதால் பாலம் கட்டும் பணிகளுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் புதிய பாலம் மூன்றாவது முறையாக நீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஆட்டையம்பாளையம், பழங்கரை, சேவூர், சூளை, கைகாட்டிபுதூர், அனைப்புதூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, காலை நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொது மக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் அவதிக்குள்ளாகினர்.