சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சில இடங்களில் கள்ளஓட்டு, செலுத்தியதாகவும், வாக்கு இயந்திரத்தை அடித்து நொறுக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்தை பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.  

இந்நிலையில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 51 மற்றும் 179 ஆகிய இரண்டு வார்டு எண்களுக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை மற்றும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 17ல் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16ல்  இரண்டு வாக்குச்சாவடியிலும், திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 25ல் இரண்டு வாக்குச்சாவடியிலும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மறு வாக்குப்பதிவில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.