ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கட்டுபாட்டுகளை விதித்துள்ளது.

தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ் தரப்பில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சில கட்டுபாடுகளை அறிவித்துள்ளது.

அதன் படி, பேரணியில் பங்கேற்பவர்கள் 500 நபருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், நிகழ்ச்சியின் போது, ​​யாரும் எந்த ஒரு தனி மனிதர், சாதி, மதம், சார்ந்து தவறாக பேசவோ பாடவோ கூடாது எனவும், பேரணியிலும், கூட்டத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை RSS தரப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எதையும் பேசவோ அல்லது வெளிப்படுத்தவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் சீர் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது எனவும், பேரணி மற்றும் பொது கட்டத்தில் பங்கேற்பாளர்கள் யாருக்கும்  காயத்தை ஏற்படுத்தக்கூடிய குச்சி, லத்தி அல்லது ஆயுதம் போன்ற எதையும் ஏந்தவோ பயன் படுத்தவோ கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஊர்வலத்தில் அல்லது பொது கூட்டத்தில் ஈடுபடுவோர், மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.