விஜய் ஆண்டனியின் மகளுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவிற்கு திரைப் பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணியளவில்  தற்கொலை செய்து கொண்டார். ஓமந்தூரார் மருத்துவமனையில் மீராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீராவின் இறப்பு குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் மீராவின் உடல் திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் மீராவின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழிகளும் நேரில் வந்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர். 

இன்று காலை மீராவின் உடலானது நல்லடக்கம் செய்வதற்காக அவரது வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டு நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்டது.

காலை 9 மணிக்கு துவங்கிய சிறப்பு பிரார்த்தனை சுமார் 1.30 மணிநேரம் நடந்தது. சிறப்பு பிரார்த்தனைக்காக , முன்னதாக தேவாலயத்தில் மீராவின் புகைப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தின் முன்பு மீராவின் உடல் வைக்கப்பட்டு 4 பேராயர்கள் மூலம்  பிரார்த்தனை பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது தனது மகளின் உடலை பார்த்து மனமுடைந்து கண்ணீர் மல்க விஜய் ஆண்டனி அவரது மகளின் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து விட்டு அவரும் அவர் மனைவியும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனையில் பேராயர்கள் மீராவுக்கு புனித தண்ணீர் தெளித்து ஆசிர்வதித்தனர்.

விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீராவின் பள்ளி தோழிகளும் தேவாலயத்தில் நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.தேவாலயத்தின் பிரார்த்தனனையிலாம் நடிகர் ஜான் விஜய், இயக்குனர்கள் மோகன் ஜி, மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் சௌந்தரர் உள்ளிட்டோரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவிக்க வந்தனர். 

தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை முடிந்து அந்த இறுதி ஊர்வல வாகனத்தில், RIP Meera Vijay Antony என்று எழுதப்பட்ட அந்த வாகனத்தில் மீராவின் உடல் வைக்கப்பட்டு கீழ்பாக்கம் கல்லறைக்கு எடுத்து வரப்பட்டது. கீழ்ப்பாக்கம் கல்லறையில் மீராவை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து மீராவின் உடல் கல்லறையை வந்தடைந்தது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மீராவின் மறைவானது விஜய் ஆண்டனியின் குடும்பத்தையும் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!