வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சீல்!

வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சீல்!

அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இயங்கி வந்ததாக கூறி வன்னியர் சங்க அலுவலக கட்டிடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை புனித தோமையர் மலை அடிவாரம் அருகே உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வன்னியர் சங்க அலுவலகம்  இயங்கி வருகிறது. பட்ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஒன்றரை ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு 10 வருட காலத்திற்கு ஒத்திக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை ஒத்திக்கு விடப்பட்ட இடத்தை வன்னியர் சங்கத்தினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

வன்னியர் சங்கத்தினர் சட்டவிரோதமாக இந்த இடத்தில் நுழைந்து கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்து வந்துள்ளதாகவும், நில விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு பல்வேறு நீதிமன்றங்களில் வன்னியர் சங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

 அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றரை ஏக்கர் நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடம் கொண்ட வளாகத்தை சீல் வைத்து இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீல் வைக்கப்பட்ட கட்டிடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் கட்டிடத்திற்கு முன்பு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாமக மூத்த நிர்வாகியுமான ஏகே மூர்த்தி சம்பவ இடத்தில் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே மூர்த்தி 40 வருடங்களுக்கு முன்பாக தனி நபரிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் நிர்வகித்து வருவதாகவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிலத்திற்கு வருவாய்த்துறை, ராணுவம், இந்து அறநிலைத்துறை என மூன்று பிரிவினர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் பல ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள நிலம் என்கிற அடிப்படையில் வன்னியர் சங்கத்திற்கு இந்த நிலத்தை ஒத்திக்கு விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான தொகையை எந்த துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால் அதை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையின் கோரிக்கை ஏற்ப தற்போது பாமக வினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர் அங்கிருந்த தொண்டர்களுடன் அமைதியாக கலைந்து சென்றார்.

இதையும் படிக்க:அதிமுக மாநாட்டிற்கு தடைக் கோரிய மனு தள்ளுபடி!