"பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு, மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும்"  சீமான்!

தமிழ்நாட்டில் தொடரும் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் ன நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "சிவகாசி அருகே, ஒரே நாளில்  ரெங்கபாளையம் கம்மாபட்டி மற்றும் மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த  இரு பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், "பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இந்த மாதத்தில் நடைபெறும் 4வது வெடி விபத்து இதுவாகும். இத்தகைய வெடி விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும், கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டுகொண்டே வருகிறது" என கவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், "பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது? உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "பட்டாசு – நாட்டுவெடிகள்  தயாரிக்கும் ஆலைகள், சேமிப்பு கிடங்குகள், பட்டாசு விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் சீரான காலஇடைவெளியில் முறையான சோதனை நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழ்நாடு அரசு இன்றுவரை அதற்கு செவிமடுக்காது அப்பாவி தமிழர்களின் உயிருடன் விளையாடி வருகிறது. மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிரந்தர தீர்வாக அமையுமென அறிவுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.