ஏழு பேர் விடுதலை.. ஆவணங்கள் எந்த தேதியில் அனுப்பப்பட்டது - விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர்  அனுப்பியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த நிலையில், எந்த தேதியில் அனுப்பப்பட்டது என விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலை.. ஆவணங்கள் எந்த தேதியில் அனுப்பப்பட்டது - விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய முந்தைய அதிமுக அரசு, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.

இது தொடர்பான வழக்கில் முன் கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு, மீண்டும்  இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஏழு பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.  

இதற்கு நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் என தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.