திமுகவை கடுமையாக சாடும் ஈ.பி.எஸ்...!

திமுகவை கடுமையாக சாடும் ஈ.பி.எஸ்...!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஈ.பி.எஸ்:

அதிமுகவில் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் ஒற்றைத்தலைமை பிரச்னைக்கு இடையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு காரணம் நான் தான் எதிர்க்கட்சி தலைவர் என்பதை காட்டி கொள்வதற்காகவே எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்ற விவாதங்களும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. இந்த கேள்விகளுக்கு மத்தியிலும் ஈ.பி.எஸ் தனது சுற்றுப்பயணத்தை மெற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று காலை தருமபுரியில் பயணத்தை தொடங்கிய அவர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என அடுத்தடுத்த மாவட்டத்திற்கு சென்று உரையாற்றினார். மாவட்டம் வாரியாக அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்த ஈ.பி.எஸ்:

காஞ்சிபுரம் வந்த ஈபிஎஸ், மக்கள் முன்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். சொத்துவரி, மின்கட்டண உயர்வு என அனைத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். மேலும்,  திமுகவில் நிதிகள் மட்டும்தான் பதவியேற்க முடியும், அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.பி, எம்.எல்.ஏ, முதலமைச்சர் ஆகலாம் எனப் பேசினார். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்த அவர், லஞ்சம் வாங்குவதில் முதன்மையான முதலமைச்சர் என முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடினார்.

மக்களிடம் கருத்தை கேட்கும் முதலமைச்சர்:

காஞ்சிபுரத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றார் ஈ.பி.எஸ். அங்கு அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் பேசிய அவர், வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசாக கொடுத்தது மின் கட்டணமும், வீட்டு வரி உயர்வும் தான் எனத் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி வருமானம் வருவதால், அதை தடை செய்யாமல் குழு அமைத்து, மக்களிடம் கருத்து கேட்டுக் காத்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.